
பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றுவதற்காக காலை 6.10 மணியளவில் சென்ற போது பேருந்துக்கு பின்னால் எம்ஏஜி (MAG) மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
எனினும் இவர்களை கவனிக்காமல் மாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் வீதிக்கு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதாகவும் இதனால் பேருந்துடன் மோதி தான் தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றயவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
