
பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை வந்துள்ள பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பாதிரியார் ஜெரோம் இலங்கை வந்த 48 மணி நேரத்திற்குள் சிஐடியிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ இந்த ஆண்டு மே மாதம் பௌத்தம் இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மே மாதம் கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றனர், ஆனால் அதற்குள் பாதிரியார் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பது தெரிய வந்தது.
பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12.2 பில்லியன் பெறுமதியான பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய போதகர் வைத்திருந்த 11 வங்கிக் கணக்குகளை பரிசோதித்ததைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் குறித்த பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
