வணிக நோக்கத்திற்காக சென்னை சென்ற இலங்கை பிரஜை சென்னையில் கடத்தப்பட்டார்

வணிக நோக்கத்திற்காக இந்தியா – சென்னைக்கு சென்ற 50 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அளிக்கப்பட்ட புகாரின்படி,  பொலிஸார் அவரை மீட்டு, சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த கே.சித்ரா (43), அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த எம்.ரியாஸ் அஸ்கர் (47), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த ஜி.வேல்முருகன் (41), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த கே.தினேஷ் (31) ஆகியோர் முகமது ஷியாம் என்ற இலங்கை பிரஜையை கடத்தியவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன் இலங்கையிலிருந்து சென்ற முகமது ஷியாம் சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள மண்ணடியில் உள்ள பாரிஸ் கார்னரில் தங்கியிருந்தவர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட  முகமது ஷியாமின் மகள் என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒரு பெண்ணிடம் இருந்து தொலைபேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தந்தையை கடத்திச் சென்றதாகக் கூறி, அவரை விடுவிக்க 15 லட்சம் ரூபாயுடன் புதன்கிழமை வருமாறு நபரொருவர் தன்னிடம் தெரிவித்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் நோர்த் பீச் பொலிஸார் முகமது ஷியாமின் மகளிற்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, சந்தேநக நபர்கள் நான்கு பேரையும் கைது செய்து,  கடத்தப்பட்டவரை காப்பாற்றினர்.

முகமது ஷியாமிடம் இருந்து கடன் வாங்கியிருந்த சித்ரா மற்றும் அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து முகமது ஷியாமை காரில் கடத்தி சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.