தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம் : மதுபானசாலைகளுக்கு பூட்டு – இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்
-பதுளை நிருபர்-
தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தீபாவளி தினத்தன்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மதுவரி திணைக்களத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
நேற்று மாலைவரை அமைதி காத்த கலால் திணைக்களம், நுவரெலியா மாவட்ட மதுபானசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு அனுமதி வழங்கிவிட்டு, பதுளை மாவட்டத்துக்கான அனுமதியை மறுத்தது.
இந்நிலையில் இவ்விடயத்தை இன்று காலை ஜனாதிபதியிடம் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.
இதன்பின்னர் என்னை தொடர்புகொண்ட ஜனாதிபதி செயலாளர், பதுளை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் ஒருபோதும் மூடப்பட்டது கிடையாது என கலால் திணைக்களம் குறிப்பிட்டது என கூறினார்.
இது முற்றிலும் பொய்யென சுட்டிக்காட்டி, கடந்த மூன்று வருடங்கள் அனுமதி வழங்கப்பட்ட கடிதங்களின் நகல்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.
அதன்பின்னர் பதுளை மாவட்ட மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மூடப்படவுள்ளது.
இவ்வாறு மதுபானசாலையை ஒருநாள் குறைப்பதன் மூலம் மதுபாவனையை தடுத்துவிடமுடியாது. ஆனால் மதுபானசாலைகளில் பெரும்பாலான மலையக இளைஞர்கள் வேலைசெய்கின்றனர். அவர்களுக்கும் தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம்.” – என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
-
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos
</ul >