
கிரிக்கெட் சபையினருக்கு சுய மரியாதை இருப்பின் தாமாகவே வெளியேறலாம் – சஜித் பிரேமதாச
கிரிக்கெட் சபையினருக்கு சுய மரியாதை இருப்பின் இன்றே கிரிக்கெட் சபையிலிருந்து தாமாகவே சுய விருப்பில் வெளியேறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்”எனும் தலைப்பிலான ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இந்நாட்டில் கிரிக்கெட்டின் சமகால மற்றும் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைவோம் என்றும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற எதிர்ப்பு பாராமல் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாக்க ஒன்றாய் இணைந்து கைகோர்க்க முன்வாருங்கள் என்றும்,கிரிக்கெட் நிர்வாகம் நினைப்பது போல்,ஆளும் தரப்பும்,எதிர்க்கட்சியும் இருவேறு கருத்துக்களில் இருந்தாலும்,இந்த விவகாரத்தில் ஒரே கருத்து நிலைப்பாட்டில் இருப்பதால், கிரிகெட் சபையினருக்கு சுய மரியாதை இருப்பின் இன்றே கிரிகெட் சபையிலிருந்து தாமாகவே சுய விருப்பில் வெளியேறலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகம் வெளியேறி கிரிக்கெட்டின் எதிர்கால திட்டத்திற்கு தெளிவான முறையான வேலைத்திட்டம் அவசியம் என்றும், கிரிக்கெட்டில் பிரயோகிக்கப்படும் அரசியல் செல்வாக்கை நீக்கி,நட்பு வட்டார கும்பல் குண்டர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகளை நீக்கி,நாம் முறையான பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கிரிக்கெட்டுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற மன்றத்தை உருவாக்கி அவர்களின் ஆலோசனைகளையும், அதிகாரிகளின் கருத்துக்களையும் கூட கேட்டறிந்து,கிரிக்கெட்டை பாதுகாக்கும் பயணத்தில் நாமனைவரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும்,கிரிக்கெட் என்பது நீல,பச்சை,சிவப்பு என்பதற்கப்பால் 220 இலட்சத்துக்கும் சொந்தமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவாதம் தொடர்பான பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்படவுள்ளதுடன், ஆளும் கட்சியினால் ஆமோதிக்கப்பட்டது.
ஆளும் கட்சி சார்பாக அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா இதனை ஆமோதித்தார்.
