தினேஷ் ஷாஃப்டரின் மரணம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு, அதனுடன் தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ராஜசூரிய இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளார்.
மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாரின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழு சமர்ப்பித்த பிரேத பரிசோதனையின் அடிப்படையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மரணம் அவரது கழுத்து மற்றும் முகப் பகுதியில் ஏற்பட்ட வெளிப்புற அழுத்தத்தின் விளைவாக நிகழ்ந்தது என்று கடந்த முதலாம் திகதி தீர்ப்பளித்தது
இதன்படி, இந்த சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த நீதவான், குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது மகிழுந்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்