
மலையக மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும்: ஜனாதிபதி
தற்போதுள்ள பெருந்தோட்ட நிறுவன முறைமையை மாற்றியமைத்து அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான திட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்குவதற்கு, அண்மையில் அமைச்சரவையில் தீர்மானித்தோம். இதற்கமைய, பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பிரதமர் உள்ளிட்ட தரப்பினரால், அந்த குழுக்களின் பரிந்துரைகள் முன்னெடுத்து செல்லப்படும்.
இதே வேளைஇ 10 பேர்ச்சர்ஸ் காணி உறுதியினை வழங்குவதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலை மற்றும் தொழில் கல்வியினை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதன்படி அனைவருக்கும் சமமான கல்வியை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய வீட்டுத்திட்டத்திற்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கமும் மலையகத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
