
இலங்கையின் உலர் வலயத்தில் களப்பயணம்
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே (Anna Bjerde) மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் திறப்பனையில் உள்ள காலநிலைக்கு உகந்த விவசாயப் பயிற்சிப் பாடசாலைக்கு (FTS) நேற்று களப்பயணமொன்றை மேற்கொண்டனர்.
காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (Climate Smart Irrigated Agriculture Project -CSIAP) முன்னேற்றத்தை ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற, நிலையான விவசாயத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி கோரியிருந்த நிலையில், அது தொடர்பில் ஆராய உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே முதன்முறையாக இலங்கை வருகை தந்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் திறப்பனை, மான்னக்குளம் கிராமத்தில் “காலநிலைக்கு உகந்த விவசாயப் பயிற்சிப் பாடசாலை” என்ற பெயரில் விவசாயப் பயிற்சிப் பாடசாலையொன்றை அமைப்பதற்கு காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயப் பயிற்சிப் பாடசாலையானது விவசாயிகளுக்கு காலநிலைக்கு உகந்த விவசாய நடைமுறைகள் மற்றும் அதிநவீன விவசாய தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கும்.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே மற்றும் தெற்காசியாவுக்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் ஆகியோரின் பங்களிப்புடன் காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயம் தொடர்பில் பயிற்சிப் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உலக வங்கியின் உதவியுடன் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட ராஜாங்கனை புளி வாழை செய்கைத் திட்டத்தையும் தூதுக்குழுவினர் பார்வையிட்டனர்.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் டகபுமி கடோனோ (Takafumi Kadono), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா (Chiyo Kanda), சர்வதேச அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனத்தின் (USAID) ) பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் (Anjali Kaur), மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கிப் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்-ஜெர்வோஸ் (Faris Hadad-Zervos), ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமை நிறுவனம் (JICA), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகாமை நிறுவனம் (USAID), யுனைடெட் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



