
பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை சமூகம் இனங்காண வேண்டும்
-அம்பாறை நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.அரசாங்கம் இவ்வாறான போலி நிறுவனங்களுக்கு எதிராக மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரோபொலிடன் கொலிஜ் ஈஸ்ட் கெம்பஸ் (Metropolitan College East Campus) இன் தவிசாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
மெட்ரோபொலிடன் கொலிஜ் ஈஸ்ட் கெம்பஸ் இன் 5ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு கல்முனை வளாகத்திலிருந்து பிரதான வீதியூடாக மாபெரும் வீதி ஊர்வலம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பின்னர் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
மெட்ரோபொலிடன் கொலிஜ் ஈஸ்ட் கெம்பஸ் இன் 5ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு கல்முனை வளாகத்திலிருந்து பிரதான வீதியூடாக மாபெரும் வீதி ஊர்வலம் பிரமாண்டமாக இடம்பெற்றது.கடந்த 24 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மெட்ரோபொலிடன் கொலிஜ் ஈஸ்ட் கெம்பஸ் பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கியுள்ளது. அது போன்று, கடந்த 2018ஆம் ஆண்டு கல்முனை மெட்ரோபொலிட்டன் காலேஜ் ஈஸ்ட் கேம்பஸ் உருவாக்கப்பட்டது.
இதில் கடந்தகால வரலாற்றைப் பார்க்கின்ற போது 2,500 மாணவர்கள் கற்றுத்தேறியிருக்கின்றார்கள். அதே போன்று ஆயிரம் மாணவர்கள் கியூ எஸ் பட்டம் பெற்று வெளியேறியிருக்கின்றார்கள். அதில் முழு இலங்கையிலும் 10 கலாநிதி பட்டங்கள் வழங்கியது எமது மெட்ரோபொலிட்டன் காலேஜ் மட்டுமே.
வெளிநாட்டிலுள்ள மாணவர்களுக்கும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் எமது நிறுவனத்தில் வழங்கப்படுகின்றது.விசேடமாக இன்றைய நிகழ்வின் போது பல்வேறு பாராட்டுக்கள், கௌரவிப்புக்கள் மற்றும் பத்து மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினையும் நாம் அறிமுகம் செய்விருக்கின்றோம். அதாவது, சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான பத்து புலமைப்பரிசிலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம் என்றும் கூறினார்.கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.நிந்தவூர் பகுதியிலும் அவ்வாறான நிறுவனங்கள் இயங்குவதாக கேள்விப்பட்டுள்ளேன்.
அரசாங்கம் இவ்வாறான போலி நிறுவனங்களுக்கு எதிராக மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எமது பிள்ளைகளின் எதிர்காலத்துடன் இவ்வாறாக போலியாக விளையாடுபவர்களை சமூகம் இனங்காண வேண்டும் மெட்ரோபொலிடன் கொலிஜ் ஈஸ்ட் கெம்பஸ் இன் தவிசாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
