இவர்களினுடைய நம்பிக்கையின் அடையாளச் சின்னமாக இருப்பது தேயிலை எனும் பச்சை தெய்வமாகும் மழை, வெயில், காற்று, அட்டை, புழு, பூச்சிகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை செயற்பாடுகள் மற்றும் விலங்கினங்கள், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், தேனிக்கள் என இயற்கை கோரல்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, அது மட்டுமன்று குறைவான கொழுந்து கூடையில் இருந்தால், அரை நாள் பேர் வேலைக்குத் தாமதமாகச் சென்றால் கங்காணியிடம் கடும் சொற்களுடன் பேச்சு, மழை வந்து விட்டால் மகராசி பாட்டு எடுப்பது போலவும் காலான் முளைப்பது போலவும் மழை துளியின் வருகை அட்டை எட்டிப் பார்க்கும் நேரமாகும். இவ்வாறு அது தேடி நிற்பது வேலை செய்யும் ஒவ்வோரு கூலித்தொழிலாளிகளின் உடம்பில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்வதாகும்.
இவ்வாறு உடம்பில் ஏறும் அட்டையினைப் பிடுங்கி எறிவதா? கூடையில் கொழுந்தினை நிரப்புவதா? என ஒவ்வொரு நொடி பொழுதும் மலையக மக்கள் தங்களது வாழ்க்கையினை உள்ளக்குமுறல்களுடன் கழிக்கின்றனர்.
மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும்.
இருப்பினும் இந்த “மலையகத் தமிழர்” எனும் பதத்திற்குள் தமிழரல்லாத தெலுங்கர், மலையாளியினரும் அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர்.
ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்ற நிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது.
இந்த பின்னடைவு, விதிவிலக்காக ஒரு சிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர்.
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், அப்பிரதேசங்கள் சார்ந்து ஏனைய தொழில் நிலைகளில் உள்ளோரும், அவர் தம் வம்சாவழியினரும் “மலையகத் தமிழர்” என்றே அழைக்கப்பட்டப் போதும். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் “இந்தியத் தமிழர்” என்றும் “இந்திய வம்சாவளித் தமிழர்” எனும் பகுப்புக்குள்ளும் அடங்குவர்.
இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில், அடையாள அட்டை வழங்கல் முறையில், மற்றும் ஏனைய பதிவுகளில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது. இம்மக்கள் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வதால், இவர்களை தோட்டக்காட்டான் என்று சிங்களவர்களால் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்