மட்டு நகரில் வகுப்பறைக்குள் வைத்து மாணவன் மீது தாக்குதல் : தாக்குதலில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் நேற்று வெள்ளிக்கிழமை காலை வகுப்பறைக்குள் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்குதலில் ஈடுபட்டவர் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட நபரை பாடசாலையின் ஒழுக்காற்று குழுவினரால் நேற்று விசாரணைக்கு அழைத்த போதிலும் இவர் சமூகமளிக்காத நிலையில் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வெள்ளிக்கிழமை மெதடிஸ்த மத்திய கல்லூரின் வகுப்பறையில் காலை 8.30 மணியளவில் வழமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வகுப்பாசிரியர் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சக மாணவனின் தந்தை வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து இத்தாக்குதலை நடாத்தியுள்ளார்.

இத்தாக்குதலை அடுத்து குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில்; முதலுதவி அளிக்கப்பட்டு நண்பகல் அளவில் வீடு சென்ற நிலையில் , சம்பவம் குறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த மாணவன் உடல் சோர்வு மற்றும் நோ காரணமாக உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் மட்டக்களப்பில் நீதிமன்றில் பணிபுரியும் உத்தியோகஸ்தர் என தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://minnal24.com/batticaloa-school-student-attacked/

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்