
காதலில் முறுகல்: தவறான முடிவு எடுத்த 16 வயது சிறுமி
தெஹிவளை, அத்திடிய பகுதியில் இதிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
ஹட்டன், டிக்ஓயா பகுதியைச் சேர்ந்த பிரசனவதனி (வயது -16) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதால், பெல்லன்வில பகுதியில் உள்ள அவரது அத்தையின் வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாகவும் காதல் தகராறு காரணமாக குறித்த யுவதி உயிரை மாய்த்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்திடிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் 6 மணித்தியாலங்கள் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவரது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தெஹிவளை சந்தியில் உள்ள மொத்த விற்பனைக் கடை ஒன்றில் பணிபுரியும் போது பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
