
மட்டு. மரத்தடி பள்ளிவாயலின் அடையாள மரத்தை அகற்றாமல் சேதமடைந்துள்ள பகுதியை மட்டும் அகற்றுமாறு கோரிக்கை
மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள புளியந்தீவு மரத்தடி பள்ளிவாயலுக்கு முன்னால் உள்ள 400 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றையும் , பள்ளிவாயலின் அடையாளத்தையும் கொண்ட வாகை மரத்தை முற்றாக வெட்டி அகற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, மரத்தடி பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
மட்டக்களப்பு புளியந்தீவு மரத்தடி பள்ளிவாயலுக்கு உரித்தான சுமார் 400 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட குறித்த வாகை மரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மூன்று தடவைகள் வீதி அகலமாக்கும் பணிகளுக்காக குறித்த மரத்தோடு பள்ளிவாயலுக்கு முன்னால் இருந்த காணி விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மரத்தின் ஒரு கிளைபகுதி சேதமடைந்துள்ள நிலையில் கிளையை அகற்றாமல் மரத்தையே அகற்ற முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த மரம் முற்றாக விழும் நிலையில் இல்லை எனவும், தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 400 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட குறித்த மரத்தின் சேதமடைந்துள்ள பகுதியை தமது பள்ளிவாயல் நிர்வாகத்தினர் அகற்ற முடியாது எனவும், மட்டு மாநகரசபையின் எல்லைக்குள் இது அமைந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மரத்தை அகற்றாமல் பாதிப்பை ஏற்படுத்தக கூடிய சேதமடைந்துள்ள பகுதியையும் , ஏனைய சில கிளைபகுதிகளையும் அகற்றி தமது பள்ளிவாயலினால் வரலாற்று ரீதியாக மதிக்கப்படுகின்ற மரத்தை பாதுகாத்து தருமாறு சியாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை நாளை திங்கட்கிழமை குறித்த மரத்தின் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை மட்டும் அகற்றுவதற்கு மட்டு மாட்ட மேலதிக அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சியாம் மேலும் தெரிவித்துள்ளார்.

