இரவில் தூக்கமின்மையால் பெண்களுக்கு ஹைப்பர் டென்சன் வருமாம்

நீங்கள் இரவில் நன்றாக தூங்குகிறீர்களா? இல்லையென்றால் இரத்த அழுத்தம் அதிகமாகி ஹைப்பர் டென்சன் வர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள். 

மோசமான தூக்கம் :
நமது அன்றாட வாழ்க்கையில் தூங்குவதும் முக்கியமான செயல்பாடாகும். நீங்கள் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் உங்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும். சரியாக தூங்காமல் இருந்தால் உடலில் ஆற்றல் குறையும், மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும், எதிலும் கவனம் செலுத்த முடியாது, செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமாக சரியாக தூங்காத பெண்களுக்கு ஹைப்பர் டென்சன் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது.

தூக்கத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு :
இந்த ஆய்விற்காக 25 முதல் 42 வயதிற்குள்ளான சுமார் 66,000 பெண்களை கடந்த 16 ஆண்டுகளாக பரிசோதித்து வந்துள்ளனர். இந்த ஆய்வு தொடங்கும் போது இதில் ஒருவருக்கு கூட ஹைப்பர் டென்சன் கிடையாது. ஆய்வில் கலந்து கொண்டவர்கள் எவ்வுளவு நேரம் தூங்குகிறார்கள், தூக்கத்தில் கீழே விழுவது, நடு இரவில் விழித்துக் கொள்வது என்பன போன்ற பிரச்சனைகள் ஏதாவது அவர்களுக்கு இருக்கிறதா ஆகியவற்றை ஆய்வாளர்கள் சேகரித்தனர். ஆய்வில் கலந்து கொண்டோரின் வயது,  இனம்,  உடல் நிறை குறியீடு, உடற்பயிற்சி, குடும்பத்தில் யாருக்காவது ஹைப்பர் டென்சன் உள்ளதா என்பதை கணக்கில் கொண்டே இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவு :
எந்தப் பெண்களுக்கெல்லாம் தூங்குவதில் பிரச்சனை இருக்கிறதோ, அவர்கள் எல்லாரும் மோசமான டயட், அதிக உடல் எடை, குறைவான உடற்பயிற்சி மற்றும் ஹைப்பர் டென்சனோடு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் 26,000 பேருக்கு ஹைப்பர் டென்சன் இருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். 7-8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் அனைவருமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள். குறைவான நேரம் தூங்குவது மட்டுமல்லாது, தூங்குவதில் பிரச்சனைகள் இருந்தாலும் அதிக ரத்த அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்சோம்னியா அறிகுறி உள்ள ஒருவருக்கு ஹைப்பர் டென்சன் வரக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது என இந்த ஆய்வு கூறுகிறது. இதை வைத்து அவர் முன்கூட்டியே பரிசோதனை செய்து நோயிலிருந்து தப்பிக்க முடியும். எவ்வுளவு சீக்கிரமாக இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறோமோ அந்தளவிற்கு நல்லது. மேலும் மோசமான தூக்கத்திற்கும் ஹைப்பர் டென்சனிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இந்த ஆய்வு தெள்ளத்தெளிவாக நிரூபித்துள்ளது. இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள இன்னும் நிறைய ஆய்வு செய்யப்பட வேண்டும்.

நன்றாக தூங்குவதற்கு டிப்ஸ் :
தினமும் கட்டாயம் இத்தனை மணிக்கு தூங்கிவிட வேண்டும், எழும்ப வேண்டும் என்ற அட்டவணையை தவறாமல் பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் தினமும் ஒரே நேரத்திற்கு தூங்கச் செல்வீர்கள். இதனால் உங்களின் தூக்கம் நன்றாக மேம்படும். உங்கள் உடலுக்கும் மூளைக்கும் நன்றாக ஓய்வு கொடுக்கவும் ஹைப்பர் டென்சனை குறைக்கவும் சரியான வழி சீரான உடற்பயிற்சி. என்ன முயற்சி செய்தாலும் தொடர்ந்து தூங்குவதில் பிரச்சனை இருந்தாலோ அல்லது உங்களுக்கு தூக்கமின்மை (இன்சோம்னியா) பிரச்சனை இருப்பதாக சந்தேகம் இருந்தாலோ,  மருத்துவரை சென்று பார்க்க தயங்காதீர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்