வெளிநாட்டு வைத்தியர்களை இலங்கைக்கு கொண்டுவரும் நோக்கம் இல்லை – கெஹலிய

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்ப்பதற்கு வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மருத்துவ பீடங்களை அதிகரிப்பது அல்லது தனியார் மருத்துவ பீடங்கள் இயங்க அனுமதிப்பது ஆகிய இரண்டு தெரிவுகள் மாத்திரமே மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து தகுதி பெற்ற சுமார் 3,000 மருத்துவ மாணவர்கள் இலங்கையில் சட்டம் 16 பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட முதல் 1,000 மருத்துவ பீடங்களில் இருந்து தகுதி பெற்ற மாணவர்களையாவது அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.