
மனநிறைவுடன் அரச பணியிலிருந்து ஓய்விற்கு செல்கின்றேன் – மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களாக என்னுடன் கடமை புரிந்த உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பினால் செவ்வனே எனது மக்கள் பணியை நான் மாவட்டத்திற்காக ஆற்ற முடிந்திருந்தது என்ற மனநிறைவுடன் எனது 32 வருட அரச பணியில் இருந்து ஓய்விற்கு செல்கின்றேன் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவிற்கு இன்று புதன்கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின்போது இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு அரச நிருவாக சேவையில் தனது அரச பணியை தொடங்கிய கலாமதி அம்பாரை மாவட்டத்தில் தமது முதல் நியமனத்தை பெற்று கடமையை ஆரம்பித்ததுடன், பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்று தமது கடமையினையாற்றியுள்ளார்.
கடந்த வருடம் தை மாதம் 17ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமையினை ஆற்றிவந்த நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி தமது 60 வயதினை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்விற்கு செல்லவுள்ளார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எம்.பஸீர், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்திரி,மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவனீதன், ஆர்.ஜதீஸ்குமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி.லக்சிகாக தீசன், மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் பிரதம முகாமையாளர், ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து
உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.









