தப்பியோடிய சந்தேக நபர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

இதன்பொழுது அங்கு சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்களை பொலிஸார் துரத்தி சென்ற வேளையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போயுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை வரை காணாத நிலையில்,  இன்று வெள்ளிக்கிழமை 2ம் நாளாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த சதுரங்க (28 வயது) எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். இவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்