
அவமானப்படுத்தியதற்காக சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினர்
இந்தியா – கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். பொலிஸார் இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விபத்து குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது தான் சிறுவனின் மரணம் குறித்து பொலிஸாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில் சாலையின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த கார், சிறுவன் வந்ததும் அவனை பின் தொடர்ந்து சென்று மோதுகிறது. பின்னர் சத்தம் கேட்டு ஓடி வரும் பொதுமக்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.
இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் , அந்த கார் சிறுவனனின் உறவினரான பிரியரஞ்சன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து பிரியரஞ்சனை விசாரிக்க பொலிஸார் முடிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோயிலின் சுவற்றில் பிரியரஞ்சன் சிறுநீர் கழித்துள்ளார். இதை கண்ட சிறுவன் பிரியரஞ்சனின் குடும்பத்தார் முன்னிலையில் “இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்துட்டு, கோயில் சுவரை அசிங்கப்படுத்துகிறாயே” என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான பிரியரஞ்சன் சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி மூன்று மாதங்களாக காத்திருந்து இந்த கொலை சம்பத்தை அரங்கேற்றியுள்ளார்.
மேலும் சிறுவன் மீது கார் ஏற்றியது மட்டுமன்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியுள்ளார். தொடர்ந்து சிறுவனின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
