மறுத்த மனைவி: நஞ்சருந்திய கணவர்

மாலபேயில் மனைவி வீடு திரும்ப முடியாது என்று கூறியதால் ”என்னுடைய தவறுகளை மன்னித்து விடுங்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நான் எனது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றேன்.” என கடிதம் எழுதி வைத்து விட்டு ஆண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

கடந்த வாரம் ஏற்பட்ட தகராற்றில் கோபமடைந்த மனைவி கணவனை பிரிந்து தன்னுடைய பிள்ளைகளுடன் அவரின் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஓரிரு நாட்கள் கடந்த நிலையிலும் பிள்ளைகளும் மனைவியும் வீடு திரும்பாமையினால் கணவன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி மனைவியை வீடு திரும்புமாறு கோரியுள்ளார். தன்னால் வீடு திரும்ப முடியாது என மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கணவரிடமிருந்து ஓரிரு தினங்கள் தொலைபேசி அழைப்புகள் வராமையினால் மனைவி அயலவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

தனது கணவன் வீட்டிலிருக்கின்றாரா அல்லது வீடு பூட்டியிருக்கின்றதா என்பதனை பார்த்து கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டிற்கு சென்ற அயலவர்கள் குறித்த பெண்ணின் கணவர் விசம் அருந்திய நிலையில் கதிரையில் உயிரிழந்திருப்பதனை அவதானித்துள்ளனர்.

உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதன் போது சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கடிதம் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் “|தவறுகளை மன்னித்து விடுங்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நான் எனது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றேன். சகோதரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளேன் அதனை பெற்றுக்கொள்ளுங்கள்” என எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நபர் நான்கு தினங்களுக்கு முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளர்.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.