அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட காளிபாஞ்சான் நாவற்சோலை விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது.

இருந்த போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை இடம் பெற்று வருகின்றது.

தங்களுக்கான நெல் கொள்வனவில் நிர்ணய விலை இன்மை, வெட்டுக் கூலி அதிகம் விளைச்சல் குறைவு என பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் உரிமையாளர்களே நெல்லை கொள்வனவு செய்கின்றனர்,  நிர்ணய விலை இன்மையால் பாரிய நஷ்டம், இலாபமற்ற அறுவடை எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் இதற்கு சாதகமான பதில்களை விவசாயிகளுக்கு வழங்கி நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.