யாழ் உட்பட பல மாவட்டங்களில் ஒரு இலட்சம் பேர் குடிநீரின்றி பாதிப்பு

யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வறண்ட காலநிலையினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தனிப்பட்ட இல்லத்திற்கு விவசாயிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாத்தறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வில்பத்து தேசிய பூங்காவில் 106 சிறிய நீரோடைகள் வறண்டு போயுள்ளதால் விலங்குகளும் நீண்ட கால வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள விலங்குகள் தாகத்தால் அவதிப்படுவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடவலவ, சந்திரிகா வெவ, மாதுரு ஓயா மற்றும் கலவெர உள்ளிட்ட முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.