Last updated on August 6th, 2023 at 03:01 pm

சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை

சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை

லிந்துலை, பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை நடைபெற்று வருவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ரேஷ் ணி துரைராஜ் மற்றும் பொது சுகாதாரம் அதிகாரி புஷ்பகுமார ஆகியோரின் தலைமையிலான குழு திடீர் சுற்றி வளைப்பு ஒன்றினை வியாழக்கிழமை முன்னெடுத்திருந்தது.

இதன்போது பொருத்தம் இல்லாத வகையில் கோழி இறைச்சியை விற்பனை செய்த வியாபார நிலையம் இனம் காணப்பட்டுள்ளது. ஆடி பிறப்பு தினத்தை முன்னிட்டு குறித்த வியாபார நிலையத்தில் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு குளிரூட்டி வசதிகளோ, கோழி இறைச்சிகளை பாதுகாப்பாக தூய்மையாக சுத்திகரிப்பு செய்து வைக்கக் கூடிய எந்த வசதிகளும் இல்லாத ஒரு இடமாக அந்த வியாபார நிலையம் காணப்பட்டுள்ளது.

குறித்த விற்பனை நிலைய உரிமையாளரை கடுமையாக எச்சரித்ததோடு இனிவரும் காலங்களில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய வேண்டுமாயின் உரிய முறையில் அனுமதியை பெற்று குறித்த வியாபார நிலையத்தை சரியான வகையில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தமக்கு தேவையான நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும்போது குறித்த வியாபார நிலையங்களில் அதற்கான பாதுகாப்பு வசதிகள் மற்றும் உரிய முறையில் உணவுப் பொருட்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் தெளிவான விளக்கத்தை பெற்றெடுத்தல் வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்த விலைக்கு உணவு பண்டங்கள் கிடைக்கின்றன என்பதற்காக பொருத்தம் இல்லாத வியாபார நிலையங்களுக்கு சென்று நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.