15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 22 வயது இளைஞன் கைது

-பதுளை நிருபர்-

ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் ஊழியராக பணிபுரியும் 22 வயதான அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பகஸ்தோவ பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி தாயின் மரணத்தின் பின்னர் பாட்டியின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜீலை 31 ஆம் திகதி சந்தேக நபர் இம்மாணவியை அம்பகஸ்தோவ விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்

அங்கு திருமணமான 30 வயதுடைய  பெண் பணத்திற்காக இருவருக்கு அறையொன்றை வழங்கியுள்ளார்.

குற்றத்துக்கு துணைப் புரிந்த குற்றசாட்டில் குறித்த பெண்ணும் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின் பணிப்புரையின் பேரில் அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்