சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தை மாற்ற வேண்டாம் -வனவிலங்கு துறை-
மத்திய மலைநாட்டில் உள்ள புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளை பிடிக்கவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு தேடி செல்லும் ஒவ்வொரு சிறுத்தைகளும் தங்கள் குட்டிகளை தாம் திரும்பி வரும் வரை புதர்களுக்கு அடியில் மறைத்து வைக்கும் பழக்கம் உள்ளது.
சிறுத்தைப்புலிகளுக்கு அருகில் அடிக்கடி; சென்றால், ஆபத்து நேரலாம் என எச்சரித்த துறை அதிகாரி, குட்டிகளை நெருக்கமாக புகைப்படம் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
குட்டிகளை தூக்கி புகைப்படம் எடுத்து அவற்றை குழப்பம் அடைய செய்யாமல் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து செல்லுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மனிதர்கள் கையாண்ட பிறகு குட்டிகளை எடுத்துச் செல்ல சிறுத்தை மறுக்கும் என்று வனவிலங்கு காப்பாளர் தெரிவித்தார்.
புதர்களின் அடியில் குட்டிகள் காணப்பட்டால், திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1992 அல்லது அருகிலுள்ள வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
