
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வீதியில் வைத்து போராட்டம்
-திருகோணமலை நிருபர்-
யானையிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி சவப்பெட்டியை வீதியில் வைத்துக்கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நபடவெவ கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லும்போது கிராம மக்கள் சவப்பெட்டியை வீதியில் வைத்துக்கொண்டு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு யானையினால் பாதுகாப்பு வழங்குமாறு கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யானையின் அட்டகாசம் தொடர்பில் பல தடவைகள் அரச அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை யானைக்கு வழங்கப்படும் அந்தஸ்து கூட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் பொலிஸார் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும் அக்கிராம மக்கள் தமது கவலையை வெளிப்படுத்தினர்.



