
சர்வகட்சி மாநாடு இன்று
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை தெளிவூட்டும் நோக்கில் இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும், சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கலந்துரையாடி இருந்தார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும், முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.
காவல்துறை அதிகாரங்கள் தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும் எனவும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது, இலங்கை அரசாங்கம், 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தி, மாகாண சபை தேர்தலை நடத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
