தாயும் அவரது 11 மாதக் குழந்தையும் கொடூரமான முறையில் படுகொலை

24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் உயிரிழந்த வாசனாவின் கணவரின் தூரத்து உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

வாசனா குமாரி மற்றும் அவரது குழந்தை கடந்த 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது கணவர் அங்குருவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிஸார், வீட்டின் குளிர்சாதன பெட்டி கதவு மற்றும் தரைப்பகுதிகளில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக வாசனாவின் கணவர் தெரிவித்துள்ளார்.அதன்படி முன்னாள் இராணுவ வீரரான அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயான ‘புருனோ’ சந்தேக நபரின் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்றமையால் பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

இதற்கிடையில், வாசனாவும் அவரது குழந்தையும் காணாமல் போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, வாசனாவின் வீட்டிலிருந்து ஐந்நூறு மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்களது சடலங்கள் விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டது.

இதன்போது, உயிரிழந்த வாசனாவின் கணவர், உரிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தால், தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்ததாக பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சடலங்கள் இருந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று முன் தினம் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபர் நேற்று முன்தினம் தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.

வாசனா மற்றும் குழந்தை காணாமல் போன அன்று, அந்த நபர் தனது முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான ஒன்றை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி கெமரா புகைப்படமும் வௌியாகியிருந்தது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்