நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் பொடி : பொலிஸ் மீது குறவர் இன பெண்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களில் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தமக்கு நடந்த கொடுமைகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட போச்சம்பள்ளி தாலுக்கா மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த பூமதி என்ற பெண் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.

கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி ஆந்திர மாநிலம் சித்தூர் பொலிசார் தனது கணவரை திருட்டு வழக்கில் தேடி வந்ததாகவும், தனது கணவர் கூலி வேலைக்காக கேரளா சென்றிருப்பதாக தெரிவித்ததாகவும் இதையடுத்து தன்னையும் தனது மாமியாரையும் 11ஆம் திகதி இரவே சித்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று திருடியதை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து சித்திரவதை செய்ததாகவும், மேலும் தன்னை ஆண் காவலர்கள் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து இரசித்ததாகவும் திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

என்ன சம்பவம் என்றே தனக்குத் தெரியாது என அழுத போதிலும் பொலிசார் தன்னை கட்டி தொங்கவிட்டு அடித்ததாகவும், பின் பல பொலிசார் தன்னை பிடித்துக் கொள்ள ஆடைகளை அவிழ்த்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தேய்த்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் ஒரு நகைக் கடையை காட்டுவதாகவும், அந்த கடையில் தான் நகையை கொடுத்திருக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் விட்டு விடுகிறோம் என பொலிசார் கூறி 5 நாட்கள் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஒப்புக் கொண்டதாகவும், பின் தன்னை ஆந்திர சிறையில் அடைத்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கதறி அழுதார்.

தன்னை மட்டுமல்லாமல் தனது மாமியார், தனது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை இதே போன்று காவல் நிலையம் அழைத்துச் சென்று ஆந்திர பொலிசார் நிர்வாணப்படுத்தி அடித்து திருட்டு வழக்குகளை ஒப்புக் கொள்ளுமாறு கொடுமைப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொலிசாரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் ஆந்திர பொலிசாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எங்கு சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றும் எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இரு மாநில காவல்துறை இச்சம்பவத்தில் நம்பிக்கைக்குரிய விதத்தில் செயல்படாத காரணத்தால் இவ்வழக்கின் புலன் விசாரணையை சிபிஐ நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்