38 வாகனங்கள் தீக்கிரை : தலையில் அடித்துக்கொண்டு கதறிய உரிமையாளர்கள்

கிரான் நிருபர்

வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட 38 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் 30, துவிச்சக்கரவண்டி-8, வாகனங்கள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் மோட்டர் சைக்கிள்கள் 4 பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன் நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்துக்கு வெளியிலும் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பேருந்தில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.

திடிரென ஏற்பட்ட இந்த தீ பரவல் சம்பவத்திற்கு காரணம் இது வரை கண்டயறிப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சிலர் தலையில் அடித்து ஒப்பாரி வைத்து கவலையினை வெளிப்படுத்தினார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதென்றால் இயலாத காரியமாகும் இச் சம்பவம் பிரதேசத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளம் கண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவலா என ஆய்வு செய்ததுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி மின் துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர், குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.