கனமழை காரணமாக வீடியோ காலில் நடந்த திருமணம்…

இந்தியா – பருவமழையில் ஒட்டுமொத்த வட இந்தியாவும் தத்தளித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் நகரங்களையும் தெருக்களையும் புரட்டிப் போட்டு வருகின்றன. இடைவிடாத மழையினால் மக்களின் அன்றாட வேலை, தொழில், போக்குவரத்து என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன. பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

மோசமான வானிலை இருந்தாலும், இந்த உலகமே வெள்ளத்தில் மூழ்கினாலும் நிச்சியக்கப்பட்ட தங்களது திருமணம் குறித்த நேரத்தில் நடந்தே தீரும் என்பதில் தீவிரமாக இருந்தனர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகள். மணமகன் ஆஷிஸ் சிங்காவிற்கு சொந்த ஊர் ஷிம்லா. மணப்பெண் ஷிவானி தாகூருக்கு சொந்த ஊர் குலு. பலரது ஆசிர்வாதத்தில் தங்களது திருமணம் விமரிசையாக நடைபெறும் என இருவரும் நினைத்த வேளையில், அவர்களது திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியது மழை. வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் இனியும் தங்கள் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெறாது என்ற முடிவுக்கு வந்தனர் மணமக்கள். கடினமான நேரத்தில் கடுமையான முடிவுகள் எடுத்தால் தான் வேலைகள் நடக்கும். அதன்படி இருவீட்டாரும் புதுமையான ஒரு முடிவை எடுத்தனர்.

வீடியோ காலில் நடந்த திருமணம்...

மணப்பெண்ணின் ஊர் வரையில் மணமகனின் ஊர்வலம் நடைபெறும் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கடுமையான மழையினால் வீட்டை விட்டு கூட அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் திருமணத்தை வீடியோ கால் மூலம் செய்து கொள்ளலாம் என்ற புதுமையான யோசனைக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மணமகன் ஒருபகுதியிலும் மணபெண் ஒருபகுதியிலும் இருந்து வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணம் வீடியோ கால் மூலம் நடைபெற்றது என தியோக் நகரின் முன்னாள் எம்எல்ஏ உறுதி செய்துள்ளார். கனமழையிலும் திருமணத்தை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ கால் வழியாக நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்