கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த 8 வயது மகன்: கொலை செய்த தாய்

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கள்ளகாதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த மகனை தாய் கொலை செய்துள்ளார்.

பதல்பூர் பகுதியைச் சேர்ந்த கல்யான் சிங் (வயது – 50) என்பவர் தனது 8 வயது மகனை ஜூலை 2ஆம் திகதியிலிருந்து காணவில்லை என கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸாரிடம் புகார் வழங்கியதை தொடர்ந்து பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அருகே உள்ள சம்பல் மாவட்டத்தில் உள்ள நீரோடை ஒன்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தந்தை கல்யான் சிங்கின் சொந்த ஊர் சம்பல் என்பதால் சிறுவனின் மரணத்தில் உறவினர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.அப்போது தான் இந்த கொலைக்கு பின்னணியில் பெற்ற தாயே இருக்கும் அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

கல்யான் சிங்க்கின் மனைவியின் பெயர் புரி. புரிக்கும் அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் ஓம்பால் சிங் என்பவருக்கும் தகாத உறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இது கல்யான் சிங்கிற்கு முற்றிலும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், இவர்களின் 8 வயது மகனுக்கு தாயின் உறவு தெரியவந்துள்ளது. தாய் புரியும் ஓம்பால் சிங்கும் ஒன்றாக இருப்பதை கடந்த ஜூன் 28ஆம் திகதி மகன் பார்த்துள்ளார். எங்கே இந்த உண்மை கல்யான் சிங்கிற்கு தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிறுவனை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர்.

அதன் பேரில் 8 வயது சிறுவனை கணவர் கல்யான் சிங்கிற்கு தெரியாமல் சம்பலில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தாய் புரி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் ஜூலை 6ஆம் திகதி அன்று சிறுவனுக்கு மருந்து கொடுப்பது போல விஷத்தை கொடுத்து மயக்கமடைய வைத்து அருகே உள்ள நீர்நிலையில் தூக்கி வீசி மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக தாய் புரி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஓம்பால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சதித்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த புரியின் உறவினர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்