
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைப்பு!
-மட்டக்களப்பு நிருபர்-
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் “Mandous” என்றழைக்கப்பட்ட குளிருடன் கூடிய சூறாவளி ஏற்பட்டதனால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இறந்திருந்தன.
இவ்வாறு உயிரிழந்த மாடு மற்றும் ஆடு வளர்ப்பாளர்கள் மற்றும் பண்னையாளர்களுக்கான இழப்பீடு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாசி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட அதிதியாகவும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் சிறப்பு அதிதியாகவும், ஏனைய திணைக்களம் சார் உயரதிகாரிகள், கால் நடை வைத்தியர்கள் உள்ளிட்ட பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் வரலாற்றின் முதன் முறையாக இயற்கை அனர்த்தம் ஒன்றுக்காக கால்நடைகளுக்கு இழப்பீட்டு தொகையாக 3.45 மில்லியன் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




