மட்டு. வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் கூட்டம்!

 

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் -கிராமிய வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்

இன்று செவ்வாய்க்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு  இப்பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு பிரதேசத்தில் கால் நடைகளை விற்பனை செய்வதற்கென தனியானதொரு பொதுச் சந்தையினை உருவாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் ஊடாக கால்நடை வளர்ப்பாளர்கள் அதிக இலாபத்தை அடைய வாய்ப்பாக குறித்த சந்தை அமையும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் தெளிவுபடுத்தியிருந்தார்.