திடீர் தீ விபத்து : 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பல்!
-பதுளை நிருபர்-
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நிர்கதிக்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்களை அத் தோட்டத்தில் மூடிக்கிடக்கும் தோட்ட வைத்தியசாலை கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத் தோட்டத்தின் 20 குடியிருப்புகள் அடங்கிய இரண்டு பகுதிகளை கொண்ட இலக்கம் (06) தொடர் வீட்டு லயத்தில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.அதேநேரத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பிடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்ககூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
இராகலை பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகிறது இப்பகுதிக்கு மின்சாரமும் விட்டு விட்டு வரும் நிலை காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தீ பிடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த தொடர் வீடுகளில் வசித்தவர்களில் ஒரு சிலரே இருந்துள்ளனர். தொழிலாளர்கள் வழமையான பணிக்கு சென்றுள்ளதுடன், மாணவர்கள் பாடசாலைக்கும், குழந்தைகள் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களுக்கும் சென்றுள்ளதால் உயிராபத்துகள் ஏதும் இடம்பெறவில்லை.
குறித்த தீ விபத்து சம்பவத்தில் 20 குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உடமைகள், ஆவணங்கள், தளபாடங்கள், ஆடைகள் என வீட்டுகளின் விலையுயர்ந்த பொருட்கள் பல எரிந்துள்ளது.
இதன் சேத விபரங்கள் உள்ளிட்ட விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தின் போது இப்பிரதேசத்தில் கடுமையாக காற்று வீசியதால் தீ பரவல் ஏற்பட்டு அதை கட்டுப்படுத்த தோட்ட மக்கள், இளைஞர்கள் போராடி வந்தும் தீயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தும் வீடுகள் எறிந்து சாம்பலாகியது. இதன்போது தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இத் தோட்ட இளைஞர் ஒருவர் கூரைப் பகுதியிலிருந்து வீழ்ந்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் தனல் விட்டு எரிந்த தீயை அணைக்க நுவரெலியா மாவட்ட தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் அவர்களு்ம் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால்
தோட்ட இளைஞர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் அறிந்து நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், வலப்பனை பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேசத்திற்கு பொருப்பான கிராம சேவகர்இதோட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் வருகை தந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வந்தனர்.
மேலும் இராகலை தோட்டத்தில் இத் தீ சம்பவத்துடன் மூன்றாவது தீ சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
அத்துடன் இச் சம்பவம் குறித்து மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் அவர்களுக்கான உணவு, உடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகம், தோட்ட நிர்வாகம் மற்றும் நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
