
வாகன விபத்து: இளைஞன் பலி
வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் (வயது – 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தை ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் 600மீற்றர் தூரம் வரையில் தரையில் இழுத்து செல்லப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
