
தேரரை தாக்கிய பெண்: முறைப்பாட்டை திரும்ப பெற்ற தேரர்
பசறை மொனரும்கல விகாரையின் தேரரை பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேரர் விகாரையில் இருந்து தனிப்பட்ட தேவைக்காக இலங்கை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைப்பிலிட சென்ற போதே பெண்ணினால் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தேரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து கொண்டு பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன் படி பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தாக்குதலுக்கான காரணம் பூஜை பொருட்களினால் ஏற்பட்டது என்பதுடன், தாக்கியதாக கூறப்படும் பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த தேரர் திங்கட்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் விடுப்பு பெற்றுக் கொண்டு வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
