
கொழும்பு காலி முகத்திடலில் மலசலகூடம் போன்ற இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள்
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும் குறித்த பகுதியில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்தார்.
காலி முகத்திடல் சதுக்கம் கொழும்பு நகரின் மிகப்பெரிய வெற்று என்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதி. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சியையும் மேற்கொள்ளவும் குறித்த பகுதியை பயன்படுத்துகின்றனர்.
மதச் செயல்பாடுகள் தவிர, அதன் அழகைப் பாதுகாக்கும் நோக்கில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு அந்த பகுதியை வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
அத்துடன் இங்கு வருபவர்களுக்கு உணவு விற்கும் வகையில், கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
