கண் சத்திரச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்ட ஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.அவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் உள்நாட்டில் கனிசமான அளவு வைத்தியர்களின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60இலிருந்து 63ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் முதுகலை பட்டதாரிகளை வைத்தியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.