
மட்டு.புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை!
-மட்டக்களப்பு நிருபர்-
புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனையொன்று நேற்று சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150 ஆவது வருட நிறைவினை முன்னிட்டு, ‘பிளாஸ்டிக்கை கடந்து செல்வோம்’ ( Pass on plastic ) எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று பாடசாலை அதிபர் ஆர்.யே.பிரபாகரன் தலைமையில் புனித மிக்கேல் சாரண படையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
29.57 செக்கனில் ஐம்பது சாரண மாணவர்களினால் 2124 பிளாஸ்ரிக் வெற்று பொத்தல்களினால் 150 இலக்கத்தை அமைத்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளனர்.
இந் நிகழ்வின் கின்னஸ் சாதனைக்கான பரிந்துரை நடுவர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் வாகரை பிரதேச செயலக கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜேயேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டு, தமது கடமையினை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் சோழன் புத்தக உலக சாதனை நிறுவனத்தினால் (Cholan book of world record) சான்றிதழ்கள் இதன் போது மிக்கேல் கல்லூரியின் சாரண மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது 2022/2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை சாரண மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பாக்கு நீரினை நிந்தி கடந்த தவேந்திரன் மதுசிகனுக்கு வெற்றி கேடயம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு யேசுசபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகமும், அதிதிகளாக 231 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டார, உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், பொலிஸ் அத்தியட்சகர் உதித் லியனகே, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி எஸ்.சிவலிங்கம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மாவட்ட சாரணர் ஆணையாளர் எஸ்.விவேகானந்தன், சாரண குழு ஆசிரியர் எஸ்.பத்மநாதன், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஏனைய பாடசாலைகளின் சாரண மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.












