அரசின் சமுர்த்தி நலத்திட்டம் ஏழைகளுக்கு இல்லையா?

 

-ஐ.எல்.எம் நாஸிம்-

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினால் ஏற்கனவே சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டிருந்த பலரும் நீக்கப்பட்டுள்ளமையை கண்டித்து சம்மாந்துறை பிரதேச செயலக வாசலில் ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.

இதன்போது பழைய முறைப்படி சமுர்த்திக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

இவர்கள், மேற்படி திட்டத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களின் தரவுகளை மீளவும் பதிவு செய்வதற்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 51 பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்  பிரதேச செயலகத்தின் வாசலில் ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது, இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தாயொருவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது சமுர்த்தியை வெட்டியுள்ளார்கள். எனக்கு இருப்பதற்கு வீடு கூட இல்லை. வாடகை வீட்டிலேயே வாழ்கின்றேன். இங்கே வந்தால் வீட்டுக்கு போங்கள் என்று சொல்லுகிறார்கள். ஐந்து பேருக்கு கொடுத்து 10 பேரை இல்லாமல் செய்யும் இந்த அரசாங்கம் எதற்கு உள்ளதென்றே தெரியவில்லை என்றார்.

மேலும், இல்லாத ஏழைபாழைகளின் சமுர்த்தியை வெட்டி வசதிபடைத்தவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இது நியாயமான விடயமே கிடையாது. இவ்வாறான திட்டங்களை ஏழைகளுக்கே வழங்க வேண்டும். இதை சமுர்த்தி உத்தியோகத்தர் நிவர்த்தி செய்ய வேண்டும்.

எனக்கு இருப்பதற்கு வீடில்லை. ஆனால் எனக்கு 03 மாடி கட்டிடம் இருப்பதாக போட்டுள்ளார்கள். மின்சாரமில்லை. 154 யுனிட் பாவித்துள்ளதாகக் காட்டியுள்ளார்கள். எனது வருமானம் 15 ஆயிரம் ரூபா. 150,000 ரூபா வருமானம் காட்டியுள்ளார்கள். இதனை எங்குசொல்வதென்றே தெரியவில்லை. இதனால் ஏழைகளின் வயிற்றில் அடிக்காமல் அரசின் நலத்திட்டங்களை ஏழைகளுக்கு வழங்கி எம்மையும் உயர்த்திவிடுங்கள் என தெரிவித்தார்.