தொடர்ச்சியாக மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

நாட்டில் இன்று புதன்கிழமை காலை 07.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் தனித்தனி பகுதிகளில் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றிரவு ஹோமாகம நியந்தகல பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 46 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத குழுவொன்று உயிரிழந்தவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இன்று புதன்கிழமை அதிகாலை கொஸ்கொட சித்தரேவ பிரதேசத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு கைத்துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது

 

ஹோமாகமை மற்றும் கொஸ்கொட ஆகிய பகுதிகளில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவான சில மணி நேரங்களில் கொட்டாவை – தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவானது.

கொட்டாவை தர்மபால வித்தியாலத்திற்கு அருகில் உள்ள தனியார் பகுப்பாய்வகம் ஒன்றிலே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவானது.

சம்பவத்தில் மத்தேகொடை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் பலியானார்.

இன்று புதன்கிழமை காலை மோட்டர் சைக்கிளில் வந்த, அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாகிச்சூட்டில், குறித்த தனியார் பகுப்பாய்வகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணை முன்னெடுக்கப்படுவதாகஇ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.