நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-திருகோணமலை நிருபர்-

நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு குச்சவெளி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறு போக அறுவடை காலம் தற்போது நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் கடந்த காலங்களில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்துள்ளதாகவும் இம்முறையாவது விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறும் அரசாங்கத்திடமும், கிழக்கு மாகாண ஆளுநரிடமும் குச்சவெளி மகா ஆலங்குளம் விவசாய சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

படைப்புழு தாக்கத்திலிருந்து மீண்டெழுந்து உரம் மற்றும் கிருமி நாசினிகளை அதிக விலைக்கு வாங்கி தற்போது பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் நெல் அறுவடைக்கான கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நெல் கொள்வனவின்போது விலைகளில் பாரிய மோசடிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நிர்ணய விலை ஒன்றினை தீர்மானிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோறுகின்றனர்.

குச்சவெளி பிரதேசத்தில் மீனவர்களும், விவசாயிகளும் வாழ்ந்து வருவதாகவும் குறித்த இரு சாராருடைய பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை எனவும் முட்டை விலையை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய நலன் கருதி பேசவில்லை எனவும் விவசாயிகள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

எமது பிரதேசத்தில் பாழைப்பழம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பல கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது நெல் அறுவடையின் போது குறைந்த விலைக்கு வியாபாரிகள் சுரண்டி எடுத்துச் செல்கின்றனர்.

ஆகவே அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.