சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பிரஜை பலி

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் சியோன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 64 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியோனில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த காரினால் மோதுண்டே சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

64 வயதான போர்த்துகீசிய வாகன ஓட்டி ஒருவர் தனது காரை வீதி வளைவில் இருந்து உவ்ரியர் நோக்கி பயணித்த போது , சைக்கிள் பாதையில் பயணித்த சைக்கிள் ஓட்டி மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் பலத்த காயம் அடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் சியோனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரவு உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரசு வழக்கறிஞர் அலுவலகம், மாநில பொலிசாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் :-பொலிஸ் செய்தி இணையத்தள அறிக்கையின் ஆதாரம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்