சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை !
-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை பாடசாலை அதிபர் எம்.பி.எம் சாபிர் தலைமையில், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் மருதூர் ஏ.ஹஸன் வழிகாட்டுதலின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
கணித அறிவு, சமூக தொடர்பாடல் விருத்தி, வியாபார நுணுக்கங்கள் என்பவற்றை விளையாட்டு அடிப்படையிலான கற்றலின் மூலம் மாணவர்களுக்கு நேரடியான அனுபவங்களை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு இச்சிறுவர் சந்தை நிகழ்ச்சித் திட்டமானது தரம் 1-5 வரையான மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
கல்விக்கு அடுத்த கட்டமான இடைப்பாடவிதான இச் செயற்பாடுகள் மாணவ சிறார்களின் தனி ஆளுமை விருத்தியை வெளிக்கொணரும் வகையில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், தேங்காய் மற்றும் கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை இதற்கு ஆதரவு வழங்கும் முகமாக கிராம மக்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம்.ஹனிபா கலந்து கொண்டதோடு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் றம்சின் காரியப்பர், நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.எம் இஸ்ஹாக், அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்