பிள்ளை பெறுவதா என்று யோசிக்கும் நிலைக்கு குடும்பஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்!

சில வாகனங்கள் வீதியில் ஓடினாலும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

நமது நாட்டின் சமூக நிலை என்ன?அடிமட்டத்தில் உள்ள 75 இலட்சம் மக்கள் வறுமையை எட்டியுள்ளனர்.மே 29 உலக வங்கியின் உலக உணவுப் பாதுகாப்பு அறிக்கையிலையே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருள் எல்லாம் சீராகிவிட்டது என்பதா? இதன் விளைவாக நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மேலும் வறுமை நிலையை அடந்துள்ளனர்.கடந்த ஆண்டை விட வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றால், நாட்டின் முன்னேற்றம் எங்கே நடந்ததுள்ளது.

கொழும்பு வர்த்தக நிலையங்களில் சில புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் காண்பித்து செய்திகளை கட்டமைப்பதால் நாட்டில் அபிவிருத்தி ஏற்படாது.

பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால், அதன் நுகர்வு குறைந்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்துள்ளதால்,மின் நுகர்வு குறைந்துள்ளது.வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு,மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் வாழ முடியாது என்பதால், தங்கள் வருமானத்தில் இருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் செலவுகளுக்கு அதிகம் செலவு செய்ய நேரிட்டுள்ளது.

பிள்ளை பெற்றெடுப்பது குறித்த தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு குடும்பஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று புத்தாடைகள் வாங்கலாமா,புதிய பாதணிகளை வாங்கலாமா,வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாமா…அப்படி ஒரு நிலை இல்லை.நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

எனவே இதை தனி ஒருவரால் செய்ய முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.வரியை அதிகரித்து, மின்கட்டணத்தை அதிகரித்து வருமானத்தைப் பெருக்குவதுதான் இப்போது நடந்துள்ளது. இது வெற்றிகரமான முறையா?இன்று அரச வருமானங்களை ஈட்ட வேறு வழிகள் உள்ளதா?

கடந்த காலங்களில்,தேயிலை,இறப்பர் முக்கிய வருமான மூலமாக இருந்தது.அதன் பின்னர், ஜனாதிபதி பிரேமதாச ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்த பின்னர், அடுத்த மிகப் பெரிய வருமானமாக ஆடை ஏற்றுமதி அமைந்திருந்தது.

ஒப்பீட்டளவில் சுற்றுலாத்துறையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையும் ஒரளவு அதிகரித்துள்ளதென்றாலும்,அந்நியச் செலவானியை ஈட்டித் தருமளவு விருத்தியடையவில்லை.

மத்திய வங்கி அறிக்கையின் படி கையிருப்பு 3.4 பில்லியனாகும்.கடன் தவனைகளை செலுத்தி நிலையான இருப்புகளை பேணுவது எவ்வாறு?

சர்வதேச நாணய நிதியமானது கம்போடியா,தாய்லாந்து,எதியோப்பியா,
பிலிப்பைஸ்,தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடணுதவிகளை வழங்கியுள்ளது.ஆனால் இலங்கைக்கு பிறப்பித்த நிபந்தனைகளைப் போல் வேறு நாடுகளுக்கு பிறப்பிக்கவில்லை.ஏனைய நாடுகள் உரிய நேரத்தில் சென்று நோய்க்கு நிவராணம் தேடிக் கொண்டன.நாம் வங்குரோத்தடைந்த பின்னரே உதவியை நாடினோம்.

இருக்கும் ஆதாய மூலங்களை மூடும் விதமாகவும் கடணுதவிகளின் நிபந்தனைகள் அமையக் கூடாது.புதிய ஆதாய மூலங்களை தேடும் வகையிலையே கடணுதவிகள் அமைய வேண்டும்.

தனிமனித நடவடிக்கையால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.கோட்டாபய ராஜபக்சவும் இவ்வாறே வந்தார்.இறுதியில் என்ன நடந்தது?.பிரதிநிதித்துவ ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணை மூலம் தெரிவாகும் ஒரு குழு அமைய வேண்டும்.
வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டும்.அப்போதே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆதாய மூலங்களை தேட வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஜனநாயக உரிமை நாட்டில் நிலவ வேண்டும்.மக்கள் உரிமைகளை ஒடுக்க இராணுவ ரீதியான ஏகாதிபத்திய ரீதியிலான சட்ட திட்டங்களை பிறப்பித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்குமுறைக்குட்படுத்த எவராலும் முடியாது, என தெரிவித்தார்.