குழந்தையின் அழுகையை நிறுத்த டேப் ஒட்டிய தாதி உத்தியோகத்தர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதியர் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக வாயில் டேப் ஒட்டியுள்ளார்.
சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனையில் பிரியா காம்ப்லே என்ற 25 வயது பெண்ணுக்கு கடந்த மே 25 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ள நிலையில், சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.
குழந்தைக்கு மருத்துவர் கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 2 மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு சென்று தாய் பால் கொடுங்கள் என தாய் பிரியாவிடம் மருத்துவர் கூறியுள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் 2ஆம் திகதி இரவு 11 மணி அளவில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வார்டுக்கு தாய் சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்த சவிதா என்ற தாதி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு வாருங்கள் போதும் என்றுள்ளார்.
தாய் பிரியாவுக்கு தாதியரின் பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தவே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது குழந்தையின் வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குழந்தை அழுது கொண்டே இருப்பது தொந்தரவாக இருந்ததால் சத்தத்தை நிறுத்த இந்த செயலை குறித்த தாதி இவ்வாறு செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தாய் நள்ளிரவிலேயே அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜாக்ருதி பாடீல் என்பவரை அழைத்து விஷயத்தை கூறி தனது குழந்தையை குறித்த மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
விவகாரம் பூதாகரமான நிலையில் சம்பந்தப்பட்ட தாதியரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.விசாரணை முடியும் வரை பணிக்கு திரும்பக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் ஜாக்ருதி மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்