சரும பிரச்சினைகளுக்கு தீர்வு: களிமண் சிகிச்சை

உங்கள் சருமம் வெள்ளையாக, மிருதுவாக, மினுமினுப்புடன் இருக்க வேண்டுமென விதவிதமான கிரீம்கள், சோப்கள், மற்றும் லோஷன்கள் என பலவும் சந்தைகளில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவற்றினால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பது சந்தேகம்.

பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது.

அதுதான் களிமண் சிகிச்சை. உடலுக்குக் களிமண் சிகிச்சையை செய்யும்போது, மண்ணில் இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும்.

மண்ணில் பல வகைகள் காணப்பட்டாலும் பெரும்பாலும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண்.

சருமத்திற்கு களிமண்ணால் சிகிச்சை செய்வது நல்லது. களிமண் நம் முகத் துளைகளிலிருக்கும் அசுத்தங்களை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க களிமண் உதவுகிறது, தோல் ஒவ்வாமை மற்றும் வெயிலால் ஏற்பட்டிருக்கும் கருமையை இது குணமாக்கும், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்தும், மேலும் தோல் நெகிழ்ச்சி மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

களிமண் போன்ற ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என கூறப்படுகிறது.

 

 

புல்லர்ஸ் எர்த் : 

முல்தானி மெட்டி எனும் புல்லர்ஸ் எர்த் பற்றி பலரும் அறிந்ததே, புல்லரின் எர்த் ஒரு சிறந்த எண்ணெய் உறிஞ்சியாகும். பன்னீருடன் சேர்த்து பயன்படுத்தலாம் இது முகத் துளைகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை கட்டுப்படுத்த உவும். இது ப்ளீச்சிங் பண்புகளையும் கொண்டுள்ளது. புல்லரின் எர்த் சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், இதை மிதமாகப் பயன்படுத்துங்கள், அதாவது வாரத்திற்கு ஒரு முறை போதுமானது.

 

பிரஞ்சு பச்சை களிமண் : 

இது லைட் களிமண் அல்லது கடல் களிமண் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த களிமண் அதன் பச்சை நிறத்தை சிதைந்த தாவர பொருள் மற்றும் இரும்பு ஆக்சைடு ஆகியவற்றிலிருந்து பெறுகிறது, இது களிமண்ணின் தரத்தை தீர்மானிக்கும் காரணியாகும். இந்த களிமண் அசுத்தங்களை உறிஞ்சுவதற்கு சிறந்தது, மேலும் இது சருமத்தின் மேற்பரப்பை நோக்கி அசுத்தத்தை நீக்குகிறது. உங்களை இளமையாகவும் மென்மையாகவும் வைக்க இந்த மண்ணால் செய்யப்பட்ட மாஸ்க்குகளை பயன்படுத்துவது சிறந்தது. இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின்னர் மீதமான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். நல்ல பலனை பெற வாரத்திற்கு இருமுறை இந்த மாஸ்க்கை பயன்படுதுங்கள்.

பெண்ட்டோனைட் களிமண் :

பெண்ட்டோனைட் களிமண் என்பது எரிமலை சாம்பலில் இருந்து உருவாக்கப்படும் ஒருவகைக் களிமண் ஆகும். இந்த வகை களிமண்ணில் அதிகப்படியான மினரல்ஸ் இருப்பதால் முகத்துக்கு எனர்ஜியைக் கொடுக்கும். இந்த வகைக் களிமண்ணுடன் சிறிதளவு தண்ணீர், ஆப்பிள் சிடர் வினிகரும் ஊற்றிக் கலக்க வேண்டும். அந்தக் கலவையை முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் பேக்கை போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும்.

கயோலின் களிமண் :

இந்த களிமண் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு வண்ணங்களில் இருக்கிறது. வெள்ளை கயோலின் களிமண் மென்மையாகவும், உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சிறப்பாக இருந்தாலும், அசுத்தங்களை உறிஞ்சுவதில் சிவப்பு வகை மிகவும் சக்தி வாய்ந்தது. இளஞ்சிவப்பு கயோலின் களிமண் என்பது சிவப்பு மற்றும் வெள்ளையின் கலவையாகும், மேலும் மஞ்சள் கயோலின் களிமண் மென்மையான சருமத்திற்கு உதவும். கயோலினைட்டு என்பது ஒருவகையான களிமண் கனிமமாகும். வெண்களிமண் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்.

தொழிற்துறை தாதுக்கள் என அழைக்கப்படும் கனிமங்களின் குழுவில் கயோலினைட்டும் ஒன்றாகும். கயோலினைட்டு அதிகமாக உள்ள பாறைகளை கயோலின் அல்லது சீனா களிமண் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. களிமண் பூசிய பின் 10-30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவ வேண்டும். வாரத்தில் 4 முறை களிமண் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

ரசவுல் களிமண் :

ரசவுல் களிமண் என்பது ஒரு வகை களிமண், சிலர் தங்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு இதை ஒரு அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இது மொராக்கோவின் அட்லஸ் மலைகளில் ஒரு பள்ளத்தாக்கில் மட்டுமே காணப்படும் பழுப்பு நிற களிமண் ஆகும். ரசவுல் களிமண் பல்வேறு கலாச்சாரங்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மொராக்கோ சிவப்பு களிமண் அல்லது கசவுல் களிமண் என்று அழைக்கப்படும் ரசவுல் களிமண் ஸ்டீவன்சைட், மெக்னீசியம் நிறைந்த களிமண், இது மற்ற கனிமங்களைக் கொண்டுள்ளது.

வறண்ட சருமத்தினர் வாரம் ஒருமுறை செய்தாலே போதும்.

காலை 12 மணிக்கு முன் களிமண் சிகிச்சை செய்வது நல்லது.

ஆண்களுக்கு முகத்தில் பூசும்போது, தாடி இருப்பின் அந்த இடத்தில் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும். அதனால், ஷேவிங் செய்த பின், களிமண்ணை முகத்தில் பூச வேண்டும்.

குறிப்பு
சளி, இருமல் பிரச்னை இருப்போர், சைனஸ், தொற்று, மாதவிலக்கான பெண்கள், புண்கள், காயங்கள் இருப்பவர்கள், மண் சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
குளிர் காலத்தில் களிமண் சிகிச்சையை செய்ய வேண்டாம்.