
ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லை : குழந்தையின் உடலை பேருந்தில் எடுத்துவந்த தந்தை
இந்தியா – மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு கடந்த வாரம் தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சிலிகுரி பகுதியில் உள்ள நார்த் பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
தொடர்ச்சியாக 6 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னருக்கும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் அடையாத நிலையில், அக்குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்தது. மருத்துவமனைக்கும் இவரின் வீடு இருக்கும் பகுதிக்கும் சுமார் 200 கிமீ தூரம் என்பதால், குழந்தையின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அனுகியுள்ளார். கடந்த ஆறு நாள் சிகிச்சையில் அஷிம் ரூ.16,000 செலவு செய்த நிலையில், மேலும் பணம் இல்லாத காரணத்தால் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், ஆம்புலன்ஸ் சாரதிகளோ ரூ.8,000 கொடுத்தால் தான் வர முடியும் என்று முரண்டு பிடித்துள்ளனர். எனவே, வேறு வழியின்றி அஷிம் பேருந்து மூலம் தனது குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார். சடலத்தை பார்த்தால் பேருந்தில் பயணிக்க விடமாட்டார்கள் என்று கருதி, தனது குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து மறைத்து சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே வந்துள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் ஏன் இவருக்கு உதவவில்லை என்று பல அரசியல்வாதிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
