தமிழ் தெரிந்த ஒருவர் ஆளுநராக வரவேண்டும்:பாற் பண்ணையாளர்கள் சங்கம் ஊடக சந்திப்பில் வேண்டுகோள்

-வாழைச்சேனை நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் எமது அன்றாட பிரச்சனைகளை நாமே கதைப்பதற்கு தமிழ் தெரிந்த ஒருவரை எங்களுக்கு நியமித்து தாருங்கள் எங்கள் மேய்ச்சல் தரை பிரச்சனைகளையும் தீர்த்து வையுங்கள் என , ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பாற் பண்ணையாளர்கள் சங்கத்தினருடைய ஊடக சந்திப்பு கிரான் கூழாவடியில் இடம்பெற்ற போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பின் போது பால் பண்ணையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நாங்கள் காலங் காலமாக கால்நடைகள் வளர்க்கின்றோம் எமக்கு ஒதுக்கி தந்த இடத்தில்தான் நாங்கள் கால் நடைகளை வளர்க்கின்றோம் யுத்தம் நடந்த காலத்தில் கால்நடைகளை கொண்டு செல்வது கடினமாக இருந்தது.

எமக்கு ஒதுக்கிய இடங்களில் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடு காரணமாக சட்டவிரோதமான விவசாய செய்கைக்கு மேட்டு நில காணி அனுமதி வழங்கபட்டதினால் எமது கால்நடைகளை இழந்து நிற்கின்றோம்.

சட்டவிரோத மின்சாரம் பாய்ச்சியும் சட்டவிரோத துப்பாக்கியால் சுட்டும் வேறு பல செயற்பாடுகள் மூலமும் எங்களுடைய 5000 ற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 3000 ற்கும் மேற்பட்ட மாடுகள் களவாடப்பட்டுள்ளன இது தொடர்பாக 18ற்கும் மேற்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளை தெகியத்தகண்டி பொலிசில் செய்துள்ளோம்.

இந்த நிலையில் ஆளுநரை மயிலத்தமடுவுக்கு அழைத்து வந்து பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை எடுத்து கூறினோம் இது நாட்டு மாடு இதனை வளர்ப்பதற்கு மேய்ச்சல் தரை வேண்டும் எனவும் எடுத்துரைத்தோம் இருந்த மொழி பிரச்சனையால் எம்மால் எமது பிரச்சனைகளை தனித்தனியாக சொல்ல முடியவில்லை.

தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்தால்தான் எங்கள் பிரச்சினைகளை பேச முடியும் . மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுநர் முன்வரவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக தமிழ் தெரிந்த ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.