16 வயது சிறுமியை படகில் கடத்தி ஐவர் கூட்டு பாலியல் வன்கொடுமை
படகில் வைத்து 16 வயது சிறுமியை ஐவர் கொண்ட குழுவினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் பகுதிக்கு அருகே உள்ள பருந்தா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
கடந்த மே 5 ஆம் திகதி மாலை மருத்துவ சிகிச்சை முடித்து விட்டு நேரமானதால் கிராமத்திற்கு திரும்பாமல் குறித்த ஊரில் சிறுமியின் குடும்பத்திற்கும் அறிமுகமான ஒருவரின் வீட்டில் சிறுமியும் தாயாரும் தங்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் இரவு வேளையில், நண்பரின் மகன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக மந்தாகினி நதிக்கரைக்கு தனியாக அழைத்து சென்று அவரிடம் அத்துமீறியிருக்கிறார். இந்தநிலையில் குறித்த இளைஞனை அறிந்த மேலும் 5 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர்.
இவர்களின் செயல்களை பார்த்த அவர்கள், இடைமறித்து தாக்கி இருவரையும் படகில் கடத்தி சென்று படகை நதிக்குள் கொண்டு சென்று 5 பேரும், அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதையடுத்து அதிகாலை வேளையில் சிறுமியை விட்டுவிட்டு குறித்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் தெரிவித்ததையடுத்து சித்தரகூட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சிறுமியின் நண்பர் மற்றும் ஏனைய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
